முதல்வர் அளித்த சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் 16 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை வலியுறுத்தி போராடி வருவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் வேதனை
சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அனுமதியின்றி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் சென்னையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்திற்கு திமுக அரசு செவி சாய்க்கவில்லை. எனவே விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டமாக 11 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடத்தினர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க வட்டார செயலாளர் மணிகண்டன் பேசியபோது,
எங்களுடன் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பெறுகின்ற சம்பளத்திற்கு இணையாக அடிப்படை ஊதியம் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை கடந்த 16 ஆண்டு காலமாக தமிழக அரசிடம் கூறி வருகிறோம்.
2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் எங்களிடம் எங்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று உறுதி அளித்தார். குழு அமைத்து 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்று வரை எந்த அறிகையும் சமர்ப்பிக்கப்படவில்லை, கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த திமுக அரசு ஆட்சி காலம் முடியும் நிலையில் உள்ளது. இப்போதாவது இந்த முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தங்கள் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முன்வைத்து அனுமதி பெறாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ம.அந்தோணிதாஸ், மாவட்டத் துணைத் தலைவர் பே.சுடலை பாண்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர்.





Comments
Post a Comment