27 ஆண்டுகளுக்குப் பிறகு அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய மகாபாரத சொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஆயிரக்கணக்கான பக்தர்கள்யை சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், கூத்தலவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத சொற்பொழிவு கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை துரியோதனன் படுகளம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 18 நாட்களாக பாண்டவர் கௌரவர் பிறந்த வரலாறு, தகாதன செய்த பகாசுரன் வதம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு செய்த அசகாய போர் என்கின்ற பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 7 நாட்களாக இரவுகளில் அர்ஜுனன் வில்வளைப்பு, ராஜ சுய யாகம், கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட தெருக்கூத்து நாடகமும் 7 நாட்கள் இரவில் நடைபெற்று வந்தது.
மேலும் பகலில் மகா பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் என தினந்தோறும் விழா நடைபெற்று வந்தது. இரவு நேரங்களில் சாமி வீதி உலா வந்து திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது.
மேலும் அக்னி வசந்த விழாவின் முக்கிய நாளான இன்று 18ம் நாளை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வையும் துரியோதனனை வதம் செய்யும் காட்சியையும் தத்துரூபமாக நாடக கலைஞர்கள் நடித்து காட்டி அசத்தினார்கள்.இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில் களிமண்ணால் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தைப் பீமன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கிடையில், அங்குக் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே பாஞ்சாலி தனது கூந்தலை முடிந்து தனது சபதத்தை நிறைவேற்றியதையடுத்து கிராம மக்கள் பஞ்சபாண்டவர்களின் சிலையைத் தூக்கி ஆடி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
பின்னர் கிராம மக்கள் துடைப்பத்தால் தலையில் அடி வாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதன் மூலம் மாதம் மும்மாரி பெய்யும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
இந்நிகழ்வில் வடகரும்பலூர் துரிஞ்சாபுரம், மல்லவாடி, ஊசாம்பாடி, கூத்தலவாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணா அறக்கட்டளை, சேகர், சீனிவாசன், கூத்தலவாடி கிராம இளைஞர்கள், தர்மகர்த்தா, கணாச்சாரி, போத்தராஜக்கள், குமாரவர்க்கம் மற்றும் பொதுமக்கள் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தீமிதி திருவிழாவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பான முறையில் நடத்தினர்.

Comments
Post a Comment