4 மாத காலமாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், பாலானந்தல் மதுரா பாரதிபுரம் கிராமத்தில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் வழங்காமலும், தெருவிளக்குகள் எரியாததாலும் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.
பாலனந்தல் மதுரா பாரதிபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாலனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் பாரதிபுரம் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் குடிநீர் வழங்காமலும் தெருவிளக்குகளை எரிய விடாமலும் கடந்த நான்கு மாத காலமாக அலைக்கழித்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் கிராம பொதுமக்களும் காலி குடங்களுடன் திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சுமார் அரை மணி நேரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம் காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். தங்களுக்கு குடிநீர் சப்ளை வழங்கும் வரை தங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடுவதற்காக சென்றனர்.
நான்கு மாத காலமாக குடிநீர் வழங்காமலும் மற்றும் தெருவிளக்குகள் சரியாக எரியாததாலும் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Comments
Post a Comment