திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு பைபாஸ் சாலையில் உள்ள மருத்துவர் இராஜா ஹரிகோவிந்தன் மற்றும் அவருடைய மகன்கள் H.ஹனீஷ்குமார் மற்றும் H.தர்ஷன் ஆகியோரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு உலக சாதனைகளை புரிந்து பாராட்டுச் சான்று, பதக்கங்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தீபமலை ஆன்மீகத் தொண்டு இயக்கம், தீபமலை மெடிக்கல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலக்ட்ரோபதி மருத்துவமனை இணைந்து மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் விதமாக மருத்துவர் யமுனா ஹரிகோவிந்தன் ஆணி படுக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் படுத்து உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் இராஜா ஹரிகோவிந்தன் மற்றும் அவருடைய மகன்கள் H.ஹனீஷ்குமார் மற்றும் H.தர்ஷன் ஆகிய மூவரும் இணைந்து ஒருவர் மீது ஒருவராக அடுக்கு பத்மாசனத்தில் அமர்ந்து அவரது குடும்பமே ஒரு விழிப்புணர்வு குடும்பம் என்பதை நிரூபித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதி அரசர் கிருபாநிதி தலைமை தாங்கினார். மருத்துவர் ராஜா ஹரிகோவிந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். லயன் ராஜ்குமார், வட ஆண்டாபட்டு ஊராட்சி மன்ற தலைவர், வழக்கறிஞர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை வனச்சரகர் ஜி.பி.சரவணன் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆணி படுக்கையின் மீது சாந்தி ஆசனத்தில் 30 நிமிடம் படுத்து உலக சாதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர் யமுனா ஹரிகோவிந்தன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.







Comments
Post a Comment