அமரர் ஜெயபால் தேவகி அம்மாள் நினைவாக திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் ஸ்ரீ ஜெயதேவகி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாம் துவக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. த.வேணுகோபால், அரிமா சங்க முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. சி.எஸ்.துரை, அரிமா முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. எம்.பி.ரோஷன் லால் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
காலை உணவு, மதிய உணவு, தண்ணீர் பாட்டில், தேனீர், பிஸ்கட், சுவரொட்டிகள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நினைவு பரிசு உள்ளிட்டவை அரிமா முன்னாள் தலைவர் மற்றும் மண்டல தலைவர் திரு. எம்.பி.ரோஷன் லால் அவர்கள் சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது.
இந்தக் கண் பரிசோதனை முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் 102 பெண்கள் 112 என மொத்தம் 214க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மேற்கொண்டனர். கண்புரை, குளுக்கோமா, தூரப்பார்வை, கிட்டப் பார்வை, கண் அழுத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருத்துவர் அறிவுரையுடன் மருந்து மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
பரிசோதனையில் கலந்து கொண்ட 214 நபர்களில் 58 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் பதிவு செய்யப்பட்டு பின்னர் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அவர்களை சொந்த ஊர் அழைத்து வந்து விடப்படுகின்றனர்.
அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இந்த கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
கண் பரிசோதனை முகாம் ஏற்பாடுகள் அனைத்தையும் ஈராடி.முருகன் சிறப்பான முறையில் செய்திருந்தார்.








Comments
Post a Comment