திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் மூன்றாவது மாநில பொதுக்குழு கூட்டத்தை பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் விமேஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பி.எம்.எஸ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் செங்கம் என்.ராஜா சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மாநில செயல் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் முருகன், ராமலட்சுமி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் சரவணகுமார், சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சக்திராணி அனைவரையும் வரவேற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் நிர்வாகிகள் தமிழகம் முழுவதுமிருந்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த பொதுக்குழுவானது கலைக்கப்பட்டு புதிதாக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து அதன் நிர்வாகிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய திருமண அமைப்பாளர்களை தமிழக அரசின் அமைப்பு சாரா நல வாரியத்தில் சேர்க்க வேண்டும், திருமண அமைப்பாளர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதால் அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்தனர்.
வருகிற 2025ம் ஆண்டு பத்தாயிரம் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட பேரணியை சென்னையில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.







Comments
Post a Comment