அன்னதானம் செய்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கும் குண்டர்கள், கோயிலை இடித்து சிலைகளை திருடியதால் பரபரப்பு
திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடிஅண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோசாலை அருகே விபூதி சித்தர் செல்வம் என்பவரின் ஆசிரமம் உள்ளது. அங்கு சிறிய கோயில் கட்டி விபூதி சித்தர் வழிபாடு நடத்தி வந்துள்ளார்.
விபூதி சித்தரின் ஆசிரமத்தை குண்டர்கள் சிலர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஷ்ரமத்திற்கு சொந்தமான கோயிலை குண்டர்கள் இடித்து தரைமட்டமாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர் கட்டியிருந்த கோயிலை இடித்து விட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, சிலைகள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர்.
தற்போது நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்காக விபூதி சித்தர் செல்வம் திருவண்ணாமலை வந்துள்ளார்.
இந்த நிலையில் குண்டர்கள் செல்வம் என்கின்ற விபூதி சித்தரை அன்னதானம் செய்யக்கூடாது, நீ எப்படி அன்னதானம் செய்கிறாய் என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று இருமாப்புடன் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மீறி அன்னதானம் செய்தால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விபூதி சித்தர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் தாங்கள் பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் தங்கள் புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விபூதி சித்தர் வேதனை தெரிவித்துள்ளார்.
குண்டர்கள் விபூதி சித்தர் என்கின்ற செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் அவரது உயிருக்கும் உடைமைக்கும் உரிய பாதுகாப்பினை காவல்துறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கிரிவலப் பாதையில் உள்ள சித்தருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் குண்டர்கள் கோயிலை இடித்து ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றை உடைத்து நொறுக்கி உள்ளிருந்த சிலைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Comments
Post a Comment