கழிவுநீருடன் மழைநீர் சாலையில் தேங்கியதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்திலுள்ள புது காலனியில் கழிவுநீருடன் மழைநீர் சாலைகளில் தேங்கியதை சரிசெய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஆரணி-வேலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் பஞ்சாயத்திலுள்ள புதிய காலனி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்புதிய காலனி பகுதிகளிலுள்ள சாலைகள் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து மூலமாக சரிசெய்ய கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.ஆனால் இதுநாள் வரை அப்பகுதியில் உள்ள சாலைகள் சரி செய்யப்படாத நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் கழிவுநீருடன் மழைநீர் சாலையில் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையான ஆரணி-வேலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தையறிந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக உங்களது கோரிக்கை நிறைவேற்றி சாலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சரி செய்து தருகிறோம் என்று கூறினர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வேலூர்-ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
Comments
Post a Comment