பஞ்சமி நிலங்களை மீட்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்படும் என தலித் விடுதலை இயக்கம் எச்சரிக்கை.
தலித் விடுதலை இயக்கம் சார்பாக பஞ்சமி நிலங்களை மீட்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைவர் என்.அமுல்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர். கிச்சா, மகளிர் அணி தலைவர் தலித் நதியா உட்பட 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் பெரணம்பாக்கம் கிராமம் சேர்ந்த சர்வே எண்.73/4பி-யில். என்ற இடத்தில் கடந்த சுமார் 65 ஆண்டுகாலமாக தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள 9 ஏக்கர் 80 சென்டு பஞ்சமி நிலத்தை தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மீட்டெடுத்து தர வேண்டும்.
அதே பஞ்சமி நிலத்தில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டு வரும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 65 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்.
அதுபோக மீதம் உள்ள விவசாய நிலத்தை அதே பகுதியில் குடியிருந்து வரும் அருந்ததியர் இன மக்களுக்கு பகிர்ந்து பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கருப்பையா கூறும்போது,
ஆக்கிரமிப்பு செய்துள்ள பஞ்சமி நிலங்களை 20 நாட்களில் மீட்டுக் கொடுக்க வேண்டும், மாறாக தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
Comments
Post a Comment