ஆயுதபூஜை முதல் ஆலயங்கள் திறப்பதை ஆத்மார்த்தமாக வரவேற்கிறேன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை.
தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வாரத்தில் 3 நாட்கள் கோயில்களை கரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி மூடி வைத்தது.
தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் கோயில் திறப்பு அனுமதியை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தை தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கம் உடைய மூத்த குடிமக்களுக்கும், தினசரி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாஜகவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினோம்.
சென்னை மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோவில் வளாகத்தில் நானும் போராட்டம் நடத்தி பேசுகையில், இன்னும் 10 நாட்களில் திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருந்தேன்.
திருவிழா நாட்களில் எல்லாம் திருக்கோயில்கள் மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து கோவில்களை திறக்க முடிவெடுத்த தமிழக அரசைப் பாராட்டி வரவேற்கிறோம்.
மக்களின் உண்மையான எண்ணங்களை பிரதிபலிக்கும் எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment